செய்திகள்
குழந்தையை மீட்கும் பணியில் ரிக் இயந்திரம்

மணப்பாறையை சுற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடாத 8 கிராமங்கள்

Published On 2019-10-28 08:50 GMT   |   Update On 2019-10-28 10:30 GMT
மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை எப்போது மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்தனர்.
திருச்சி:

நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட இருந்த திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் எப்படியாவது ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மீட்கப்பட வேண்டும் என்பதிலேயே தங்கள் எண்ண ஓட்டங்களை செலுத்தினர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்காமல் குழந்தை மீட்பு பணிகளையே பார்த்தனர். பெரும்பாலான வீடுகளில் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்தே காணப்பட்டது. குறிப்பாக மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒத்தக்கடை, புறத்தாக்குடி, வேங்கைக்குறிச்சி, மாராச்சி ரெட்டியபட்டி உள்ளிட்ட 8 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை மறந்தனர்.



மேற்கண்ட கிராமங்களில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கூட கேட்கவில்லை. நடுக்காட்டுப்பட்டியை சொந்த ஊராக கொண்டு வெளியூர்களில் வேலைபார்த்து வரும் ஏராளமானோர் தீபாவளி பண்டிகைக்காக வந்திருந்தனர். அவர்கள் குழந்தை எப்போது மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், குழிக்குள் விழுந்த குழந்தை உயிருக்கு போராடி வரும்போது எங்களுக்கு எதற்கு தீபாவளி. அந்த குழந்தை நல்லபடியாக மீட்கப்பட்டுவிட்டால் இரட்டை தீபாவளியாக கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி நாளையே மறந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதையே எதிர்பார்த்திருந்தனர்.

Tags:    

Similar News