செய்திகள்
சுர்ஜித் மீட்பு பணியில் தொய்வு

நடுக்காட்டுப்பட்டியில் மழை - சுர்ஜித் மீட்பு பணியில் தொய்வு

Published On 2019-10-28 05:03 GMT   |   Update On 2019-10-28 05:03 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்து வரும் நிலையில், குழந்தையை மீட்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது பெய்து வரும் மழையும் மீட்பு பணிக்கு பெரும் இடையூறாக உள்ளது.

குழந்தை விழுந்த கடந்த 25-ந்தேதி மாலை முதல் நடுக்காட்டுப்பட்டி கிராமம் வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார் வானிலை ஆய்வு மையங்களும் உரிய தகவல்களை அளித்து வருகின்றன.

நேற்று மாலை திருச்சியை அடுத்த மணப்பாறை செல்லும் வழியில் உள்ள ராம்ஜி நகர், இனாம்குளத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் நடுக்காட்டுப்பட்டியில் அப்போது மழை பெய்யவில்லை. ஆனாலும் அடுத்த ஒரு சில மணிகளில் சாரலுடன் தொடங்கிய மழை பலத்த மழையாக பெய்தது.



உடனடியாக அங்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு ஆழ்துளைக்கு தண்ணீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தையை மீட்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக மீட்பு பணிகள் பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Tags:    

Similar News