செய்திகள்
நகைகள் மீட்பு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு

Published On 2019-10-26 03:10 GMT   |   Update On 2019-10-26 03:10 GMT
லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.
திருச்சி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி 28½ கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இது குறித்து திருச்சி தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதே கொள்ளை கும்பல் தான் கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் அருகே நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். பெங்களூரு போலீசார் முருகனை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சுரேசையும், மற்றொருவரான கணேசனையும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக சமயபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அப்போது கணேசனிடம் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகே புதைத்து வைத்து இருந்த 3 கிலோ தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த வழக்கின் முக்கிய புள்ளியான முருகனை காவலில் எடுக்க முடியாமல் திருச்சி போலீசார் தவித்து வருகிறார்கள். முருகன் மீது பெங்களூருவில் ஏராளமான வழக்குகள் உள்ளதால் பெங்களூரு போலீசார் தொடர்ச்சியாக அடுத்தடுத்து முருகனை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதன் காரணமாக திருச்சி போலீசார் முருகனை காவலில் எடுக்க முடியாத சூழல் உள்ளது.



இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28½ கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விட்டோம். மீதமுள்ள 3 கிலோ நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கிய குற்றவாளியான முருகனை காவலில் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 28-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூரு கோர்ட்டில் முருகனை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது திருச்சி தனிப்படையினர் முருகனை காவலில் எடுக்க வாய்ப்பு உள்ளது. முருகன் மீது கர்நாடகாவில் 72 வழக்குகளும், தமிழகத்தில் 17 வழக்குகளும், ஆந்திராவில் 4 வழக்குகள் என 93 வழக்குகள் உள்ளன” என்றார்.
Tags:    

Similar News