செய்திகள்
உயர் நீதிமன்றம்

மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கை ரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு

Published On 2019-10-25 12:54 GMT   |   Update On 2019-10-25 13:07 GMT
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா சிக்கினார். மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மேலும் சில மாணவர்கள் நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்பான், மாணவி பிரியங்கா ஆகியோரும் அவர்களது பெற்றோரும் சிக்கினர். நீட் தேர்வு மோசடி தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். 



இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்து தேசிய தேர்வு முகமையிடம் வரும் 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News