செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2019-10-25 04:40 GMT   |   Update On 2019-10-25 04:40 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 22-ந் தேதி 16 ஆயிரத்து 283 கன அடியாக இருந்த நீர்வரத்து 23-ந்தேதி 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120.20 அடியாக நீடிக்கிறது.

இனிவரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று இரவு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News