செய்திகள்
கீழடி அகழாய்வு

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2019-10-25 03:16 GMT   |   Update On 2019-10-25 03:16 GMT
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதி அளித்து உள்ளது.
சென்னை:

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமீபத்தில் தமிழகத்தில் அழகன்குளம், பட்டறைப்பெரும்புதூர் மற்றும் கீழடி ஆகிய தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விரிவான தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முறையாக 2014-15-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் தமிழகத்துக்கும், ரோம் நாட்டுக்குமான வணிகத் தொடர்புக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. சமீபத்தில் தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுகளுக்கு தமிழக அரசால் 2017-18-ம் ஆண்டுக்கு ரூ.55 லட்சமும், 2018-19-ம் ஆண்டுக்கு ரூ.47 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அகழாய்வுகளின் முடிவுகளின் மூலம் கீழடி 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், வைகை ஆற்றங்கரையில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொல்லியல் துறையால் 2019-20-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி ஆகிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனைக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக அரசு, ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் தொல்லியல் கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்வதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தாண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் மற்றும் கீழடி ஆகிய இடங்களில் ஜனவரி மாதம் இறுதியில் முறையான தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் தொடங்கப்பட உள்ளன.

ஆதிச்சநல்லூரில் பறம்பு எனும் பகுதியில் 1876-ம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல தாழிகளும், எலும்புகளும், பொற்பட்டங்களும், வெண்கல பாத்திரங்களும், இரும்பு பொருட்களும், மட்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் 1902-03 மற்றும் 1903-04-ம் ஆண்டுகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2003-04, 2004-05 ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.



அதேபோல கொடுமணலில் பெருங்கற்கால மற்றும் வரலாற்றுத் தொடக்க கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதியில் அரிய கல்மணிகள் செய்தல், இரும்பு உருக்கு தொழில், உழவுத் தொழில் போன்ற தொழில் கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

சிவகளை எனும் ஊரில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரம்பு பகுதியில் உள்ள தொல்லியல் மேட்டில் இரும்பு காலத்தைச் சேர்ந்த எண்ணற்ற தொல்பொருட்கள் மேற்பரப்பில் கிடைக்கின்றன. ஆதிச்சநல்லூர் போன்று இப்பகுதியிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த பண்பாட்டை வெளிக்கொணர அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

கீழடியில் 2014-15, 2015-16, 2016-17, 2018-19 என்ற 4 கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கீழடியில் சங்ககால (வரலாற்றுத் தொடக்ககாலம்) மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. 4-ம் கட்ட ஆய்வில் 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும் பழந்தமிழரின் கட்டுமானப் பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன. 5-ம் கட்ட ஆய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டு உள்ளன.

இந்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட அகழாய்வில் வெளிப்படுத்திய கட்டுமானத்தின் தொடர்ச்சியை வெளிக்கொணர்ந்துள்ளது. இக்கட்டுமானங்கள் செங்கலால் ஆன திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News