செய்திகள்
ஜான்குமார்

வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் சாதனையை முறியடித்த ஜான்குமார்

Published On 2019-10-24 08:51 GMT   |   Update On 2019-10-24 12:11 GMT
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், வாக்கு வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்ற வைத்திலிங்கத்தின் சாதனையை முறியடித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை காமராஜ் நகர் தொகுதி 2011 தேர்தலின்போது மறுசீரமைப்பின்படி புதிதாக உருவான தொகுதி ஆகும்.

ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய 3 தொகுதிகளில் இருந்த பகுதிகளை கொண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வைத்திலிங்கம் தான் வெற்றி பெற்றார். இதனால் இத்தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காமராஜ்நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 33 ஆயிரத்து 207. இதில் பதிவான வாக்குகள் 25 ஆயிரத்து 774.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 11 ஆயிரத்து 618 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாரம் கணேசன் 6 ஆயிரத்து 512, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தயாளன் 3 ஆயிரத்து 642, பா.ஜனதா வேட்பாளர் ரவிச்சந்திரன் 764 வாக்குகளும் பெற்றனர்.

வைத்திலிங்கம் 5 ஆயிரத்து 106 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7 ஆயிரத்து 171 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வைத்திலிங்கம் பெற்ற வித்தியாசத்தை விட வேட்பாளர் ஜான்குமார் 2 ஆயிரத்து 65 வாக்கு அதிகமாக பெற்றுள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா தனித்தனியே போட்டியிட்டது. இவர்கள் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மொத்தமாக சேர்ந்து 10 ஆயிரத்து 918 வாக்குகள் பெற்றிருந்தனர்.

ஆனால் இத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் ஆதரவு அளித்தும் 7 ஆயிரத்து 611 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
Tags:    

Similar News