செய்திகள்
திருமலை நாயக்கர் மகால்

ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்படுகிறது

Published On 2019-10-23 10:26 GMT   |   Update On 2019-10-23 10:26 GMT
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை புதுப்பிக்க சுற்றுலாத்துறை ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் அரண்மனையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
மதுரை:

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பாழடைந்த கட்டிடம் போல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

போதிய பணியாளர்கள் இல்லாததால் மகால் சுகாதாரம் இல்லாமல் தூசி படர்ந்து காணப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான புறாக்கள் வளருகின்றன. இந்த புறாக்களின் எச்சத்தால் அரண்மனை வளாகமும் பிரம்மாண்ட தூண்களும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

போதிய கண்காணிப்பு இல்லாததால் தூண்களில் சுற்றுலா பயணிகள் சிலர் தங்கள் பெயர்களை கிறுக்கி வைத்து அசிங்கப்படுத்துகின்றனர்.

அரண்மனை மேற்கூரையின் ஒரு பகுதி சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு கீழே விழுந்தது. அந்தப்பகுதியில் கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை வளாகத்தில் கடந்த காலங்களில் ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடந்தன. இதற்காக தொல்லியல் துறைக்கு நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வாடகை கிடைத்தது.

ஆனால் படப்பிடிப்பு முடிந்து சென்ற பிறகு தொல்லியல் துறை ரூ.10 ஆயிரம் செலவு செய்தது. அந்த அளவுக்கு அரண்மனை வளாக சுவர்கள், தூண்களில் ஆணிகளை அடித்து அலங்கோலப்படுத்தி உள்ளனர்.

கேமரா வைப்பதாக கூறி அரண்மனை சுவர்களையும் சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு கலைத் துறையை மேம்படுத்துவதாக கூறி குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது.

இதனால் அதிருப்தியடைந்த தொல்லியல் ஆர்வலர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் திரும்பிய பக்கமெல்லாம் சுகாதாரமில்லாமல் தூசியும், புறா எச்சமும், அழுக்கும் படிந்து அரண்மனை தனது அழகை இழந்து விட்டது. தொல்லியல் துறையில் போதிய நிதி இல்லாததால் அரண்மனையை பராமரிக்க முடியவில்லை.

தற்போது சுற்றுலாத்துறை திருமலை நாயக்கர் அரண்மனையை புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் அரண்மனையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

அரண்மனையின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்படும். ராட்சத தூண்களில் சுற்றுலா பயணிகள் கிறுக்கினாலும், அதை தண்ணீர் ஊற்றி அழிக்கக்கூடிய வகையில் வடமாநில புராதன சின்னங்களை போல் புதுவகை பெயிண்டிங் கோட்டிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புறாக்கள் அரண்மனை வளாகத்துக்குள் நுழையாதவாறு மேற்கூரையில் வலை அமைப்பு ஏற்படுத்தப்படும். பார்க்கிங் வசதியும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News