செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து

Published On 2019-10-23 10:01 GMT   |   Update On 2019-10-23 10:01 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ‘ஆட்டநாயகன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பாரதிய ஜனதா தலைவர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் அடிக்கடி கருத்துக்களை கூறி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியை ‘டாடி’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ‘ஆட்டநாயகன்’ என்று ராஜேந்திரபாலாஜி புகழ்ந்துள்ளார்.

அமித்ஷாவுக்கு நேற்று பிறந்தநாளாகும். இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் டுவிட்டரில் அமித்ஷாவை வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா தேசிய தலைவர் மத்திய உள்துறை அமைச்சர், ‘ஆட்டநாயகன்’ அமித்ஷாஜி பிறந்தநாளில் பூரண நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட் டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெற்ற பிரமாண்டமான வெற்றி மற்றும் அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவே வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றை மனதில் வைத்தே, அமித்ஷாவை ஆட்டநாயகன் என்று ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷாவை ஆட்ட நாயகன் என்று ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து பேசி இருப்பதற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வரவேற்றுள்ளார். பா.ஜனதா கட்சியினரும் ராஜேந்திர பாலாஜியின் டுவிட்டர் பதிவுக்கு ‘லைக்’ தெரிவித்துள்ளனர்.

அமித்ஷாவின் இந்தி மொழி பற்றிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தபோது, அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறி ராஜேந்திர பாலாஜி, அமித்ஷாவுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News