செய்திகள்
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பார்த்தார்.

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 40 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Published On 2019-10-23 09:48 GMT   |   Update On 2019-10-23 09:48 GMT
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 40 குழந்தைகளுக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெங்குவினால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள். டெங்குவை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்ட போதிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிறு குழந்தைகள், அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு டெங்கு நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். டெங்கு அறிகுறி மற்றும் தீவிர காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனையிலும் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று 5 பேர் டெங்கு ‘பாசிட்டிவ்’வுடன் சிகிச்சை பெறுகின்றனர். வார்டில் பெரியவர்கள் 20 பேரும், சிறுவர்கள் 15 பேரும் என மொத்தம் 35 பேர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமும் 180 முதல் 220 பேர் புறநோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். தண்டையார்பேட்டை அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு 30 பேரும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர்.

இதேபோல ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 40 குழந்தைகளுக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 132 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் எழிலரசி கூறுகையில், ‘காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 500 முதல் 750 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் வார்டில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது’ என்றார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 144 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்கள் பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளனர் என்று மருத்துவ கல்லூரி இயக்குனர் வசந்தாமணி தெரிவித்தார். இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று புறநோயாளிகளாக செல்கிறார்கள்.

சைதாப்பேட்டை பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையறிந்த தொகுதி எம்.எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டர்களிடம் கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News