செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

தொடர் மழை - திண்டுக்கல், தேனி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2019-10-23 09:00 GMT   |   Update On 2019-10-23 09:00 GMT
தொடர் மழை காரணமாக திண்டுக்கல், தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு 1828 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் 126.95 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1530 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது.

மேலும் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து 2861 கனஅடியாக உள்ளது. மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 2090 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 222 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டமும் 52.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.64 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 187 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் வரகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக் கையுடன் ஆற்றை கடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளனர். மழை இல்லாமல் வறண்டு கிடந்த ஆத்தூர் காமராஜர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்து 8 அடியாக உள்ளது. இதனால் திண்டுக்கல், சின்னாளபட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது.

மேகமலை, தூவானம், இரவங்கலாறு உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரான பின்னர் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைப்பகுதிகளில் நீர்வரத்து இன்றி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனி வரதமாநதி அணையின் நீர்மட்டம் 60 அடியை நெருங்கி இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை பழனி வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66 அடியை எட்டியது. அப்போது அணையின் மறுகால் பகுதி வழியே சுமார் 10 நிமிடம் மட்டும் தண்ணீர் வழிந்தோடியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 46 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 611 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி நீர்மட்ட உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது 49 அடி வரையில் தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 அடி உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

Tags:    

Similar News