செய்திகள்
கஞ்சா கடத்தல்

உடுமலையில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்சில் ரூ. 1 கோடி கஞ்சா கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-10-23 04:42 GMT   |   Update On 2019-10-23 04:42 GMT
உடுமலையில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்சில் ரூ. 1 கோடி கஞ்சா கடத்திய 2 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

உடுமலை:

கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உடுமலையில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உடுமலை சென்ற போலீசார் உடுமலை-பழனி சாலையில் சோதனை நடத்தினர். அப்போது பழனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சைரன் ஒலித்த படி வந்த ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

ஆம்புலன்சில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள் . அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். விசாரணையில் ஆம்புலன்சை ஓட்டி வந்தது உடுமலை சங்கிலி வீதியை சேர்ந்த கருப்புசாமி (31) என்பது தெரிய வந்தது.

அவருடன் வந்தவர் அருண் குமார் (22) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆம்புலன்சில் போலீசார் சோதனை செய்த போது அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது. சோதனை நடைபெற்ற போது கருப்புசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அங்கிருந்த அருண் குமாரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கருப்புசாமி சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். கடந்த 18-ந் தேதி அவர் உடுமலையில் வேறு ஒருவருக்கு சொந்தமான டெம்போ டிராவல்ஸ் ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்து ஆந்திர மாநிலம் விஜயவாடா தாடகிரி மலைக்கு சென்று 600 கிலோ கஞ்சாவை வாங்கி கொண்டு உடுமலைக்கு வந்துள்ளார்.

கருப்புசாமி தனது வீட்டில் 300 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விட்டு மீதி 300 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் பழனி வழியாக திருச்சிக்கு கொண்டு சென்ற போது போலீசில் சிக்கி கொண்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 300 கிலோ கஞ்சாவையும் அதனை கடத்த பயன்படுத்திய ஆம்புலன்சையும் போதை பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் உடுமலையில் உள்ள கருப்புசாமி வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி. வின்சென்ட், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அப்போது அசோக்குமார் (21) என்பவர் இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார். இவர் கஞ்சாவை வாகனங்களில் ஏற்றி இறக்க உதவியதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.

கைதான 2 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கருப்புசாமியை தேடி வருகிறார்கள்.

உடுமலையில் இருந்து திருச்சிக்கு யாருக்கு சப்ளை செய்ய இந்த கஞ்சாவை கொண்டு சென்றார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறும் போது, ஆம்புலன்சில் கஞ்சா கடத்துவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக கொள்முதல் செய்த நபர், கடத்தலில் ஈடுபட்டவர்கள் என மிகப்பெரிய நெட் ஓர்க் உள்ளது. இது குறித்து விசாரித்து ஒட்டு மொத்த கும்பலும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

Tags:    

Similar News