செய்திகள்
கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்

கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை அலுவலகத்தில் மகன்-மருமகள் ஆஜர்

Published On 2019-10-22 06:44 GMT   |   Update On 2019-10-22 10:22 GMT
கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கல்கி விஜயகுமாரின் மகன், மருமகள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
சென்னை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

விஜயகுமாரின் தந்தை வரதராஜுலு ரெயில்வேயில் பணிபுரிந்ததால் அவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. படிப்பை முடித்ததும் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகுமார், அதில் வருமானம் இல்லாததால் லாரி ஷெட், ரியல் எஸ்டேட், எல்.ஐ.சி. ஏஜெண்டு என பல தொழில்களில் ஈடுபட்டார்.

அவற்றிலும் அவர் எதிர்பார்த்த அவுக்கு வருவாய் கிடைக்காததால் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் தன்னைத்தானே “கல்கி பகவான்” என்று அழைத்துக் கொண்டார். “நான் விஷ்ணுவின் அவதாரம்” என்று விளம்பரம் செய்ததால் அவருக்கு பண மழை கொட்டியது.

ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக அவரைத் தேடி வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. இதையடுத்து சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் விஜயகுமார் முதலில் சிறிய ஆசிரமம் கட்டினார். பிறகு ஆட்கள் வருகையும் வருவாயும் அதிகரித்ததால் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்ய பாளையத்தில் மிக பிரமாண்டமான ஆசிரமம் கட்டினார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. அதுபோல அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலும் கல்கி ஆசிரமத்துக்கு கிளைகள் இருக்கின்றன.

வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கல்வி ஆசிரமம் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. குறிப்பாக கட்டுமான துறையில் பல நூறு கோடி ரூபாய்களை கல்கி ஆசிரமம் முதலீடு செய்துள்ளது. வெளிநாடுகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, ப்ளு வாட்டர் ஆகிய பெயர்களிலும் கல்கி ஆசிரமம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த வகையில் கல்கி ஆசிரமத்திற்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.



அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மா பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரிதா ஆகிய பெயர்களிலும் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கல்கி ஆசிரமம் சுமார் 25 நாடுகளில் பினாமி பெயர்களில் ஓட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. கல்கி ஆசிரமத்திற்கு வேறு பெயர்களில் கப்பல்களும், சிறிய ரக விமானமும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி கல்கி ஆசிரமத்திலும், அதன் கிளைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் 400 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த சோதனை நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமையுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும், நேரடி வரி விதிப்பு துறையின் செய்தி தொடர்பாளர் சுரபி அலுவாலியாவும் கூறியதாவது:-

கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கணக்கில் வராத ரூ.65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.45 கோடி இந்திய பணமாகும். மீதமுள்ளவை அமெரிக்க டாலர்களாக உள்ளன.

மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் ஹவாலா முறையில் பணபரிமாற்றம் நடந்து ரூ.100 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதற்கு உரிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை ஆராயப்பட்டு வருகின்றன. பினாமி பெயர்களில் நிலம் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 19 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கல்கி அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகள், நன்கொடை வரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 24 வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. அது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுரபி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ.800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பதால் அதுபற்றி விஜயகுமாரின் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் சோதனையில் கிடைத்த பணம்-நகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகுமாரின் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிரடி விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரிதா இருவரும் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருப்பதாக நேற்று இரவு கூறப்பட்டது.

வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கவே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்று விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாவும், மருமகள் பிரிதாவும் சென்னை வருமான வரித்துறை முன்பு ஆஜர் ஆனார்கள்.

அவர்கள் இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News