செய்திகள்
மணிமண்டபத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-10-21 03:10 GMT   |   Update On 2019-10-21 03:10 GMT
திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர்:

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாமர மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக எளிய நடையில் ‘தினத்தந்தி’ என்ற நாளிதழை தொடங்கிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புதல்வர் ஆன்மிக செம்மல், கொடை வள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஜெயலலிதா அரசு பரிசீலித்தது. அதன்படி, தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியின்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.



இதையடுத்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. மணிமண்டபத்தின் நடுவே அமைக்கப்பட உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலை தயார் நிலையில் சென்னையில் இருக்கிறது.

அது விரைவில் கொண்டு வரப்பட்டு இங்கு நிறுவப்பட உள்ளது. பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துவிட்டன. விரைவில் மணிமண்டபம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News