செய்திகள்
ரங்கசாமி

புதுவை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் - ரங்கசாமி பேட்டி

Published On 2019-10-19 10:10 GMT   |   Update On 2019-10-19 10:10 GMT
புதுவை மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் வேட்பாளரின் வெற்றி நிச்சயம் என்று என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்ற புவனேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ணாநகர், வசந்த நகரில் விடுபட்ட பகுதிகளில் வீதி வீதியாக வீடு வீடாக சென்று ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, எம்.எல்.ஏ. செல்வம், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் வாரிய தலைவர் மதி, பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் சாரம் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். பிரச்சாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

காமராஜ்நகர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் சென்று வாக்கு சேகரித்துள்ளோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் வேட்பாளரின் வெற்றி நிச்சயம். கூட்டணி கட்சியினரும் முழுமையாக எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு வாக்கு சேகரித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அன்பழகன் கூறியதாவது:

புதுவை காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், முறைகேடுகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார். அதோடு கவர்னர் மீது தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதை புதுவை கவர்னர் கிரண்பேடி கண்டித்துள்ளார். ஏனாமில் என்ன நடக்கிறது? என தெரியாமல் ஸ்டாலின் பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தலின்போது இலவச அரிசி கொள்முதல் செய்து மாநில எல்லைக்கு வந்துவிட்டது. கோரிமேடு எல்லையில் லாரியில் அரிசி நிற்பதாக பிரச்சாரம் செய்தனர். பாராளுமன்ற தேர்தல் முடிந்து 5 மாதமாகியும் எல்லையில் இருக்கும் அரிசி இதுவரை வீட்டிற்கு வந்து சேரவில்லை. ஏழை மக்களுக்கு சேர வேண்டிய அரிசியை காங்கிரஸ் அரசு கொள்ளையடித்துள்ளது. பொருளாதார குற்றவாளியான ஜான்குமாரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரன் வெற்றி பெற்றால் தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குவோம். இதை எப்படி நான் கூற முடியும் என கேட்கலாம். புவனேஸ்வரன் வெற்றி பெற்றால் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆவார். அப்போது அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News