செய்திகள்
வைகை அணை நீர் தேக்க பகுதியில் செத்து கிடக்கும் மீன்கள்

வைகை அணை பகுதியில் செத்து மிதக்கும் மீன்கள்

Published On 2019-10-19 05:03 GMT   |   Update On 2019-10-19 05:03 GMT
ரசாயன கழிவு கலப்பால் வைகை அணை நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்க பகுதியில் மீன்வளத்துறை சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு இயற்கையாக வளரும் மீன்களை தேனி மாவட்டம் மட்டுமின்றி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருகிறது.

இதனால் வைகை அணையில் வளரும் நிலையில் உள்ள மீன்கள் நோய்தொற்று ஏற்பட்டு கரையோரப்பகுதியில் செத்து மிதக்கின்றன. மேலும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் உடல்களில் ஏராளமான காயங்கள் காணப்படுகின்றன.

இதுமட்டுமின்றி மீன்களின் நிறமும் மாறி வருகிறது. எனவே இதனை உண்ணும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் நிலவி உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக அணையை சுற்றி சட்டவிரோதமான ரசாயன சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் வைகை அணை நீரில் கலந்தன.

இது குறித்து ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது மீன்கள் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை மீன்வள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்து இவை தரமாக உள்ளதா? என்பதை பரிசோதித்து பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்றனர்.



Tags:    

Similar News