செய்திகள்
இயக்குனர் கவுதமன் நடுரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

விக்கிரவாண்டியில் இன்று இயக்குனர் கவுதமன் மறியல் போராட்டம்

Published On 2019-10-17 10:07 GMT   |   Update On 2019-10-17 10:07 GMT
பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி விக்கிரவாண்டியில் இன்று இயக்குனர் கவுதமன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு அ.தி.மு.க.- தி.மு.க. மற்றும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கவுதமன் உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.- தி.மு.க.வும் பணப்பட்டுவாடா நடத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து மனு கொடுத்தார்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கவுதமன் போராட்டம் நடத்த முடிவு செய்தார். இன்று காலை 11.50 மணிக்கு இயக்குனர் கவுதமன் நிர்வாகிகளுடன் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலைக்கு வந்தார்.

பின்னர் அவர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் நிர்வாகிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

மறியலில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அவர் தனது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

Tags:    

Similar News