செய்திகள்
கமல்ஹாசன்

சென்னையில் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2019-10-17 08:44 GMT   |   Update On 2019-10-17 08:44 GMT
கமல்ஹாசன் வரும் நவம்பர் 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3-வது இடம் பெற்றது.

இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது. அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப் புறங்களில் ஆதரவு இல்லை.

இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப் புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

கமல் வரும் நவம்பர் 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். இது குறித்து கமல் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:-

கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார் கமல். தன் தந்தையே தனது கலையுலகுக்கு ரோல் மாடலாக இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7-ந்தேதிதான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவுநாளும். அதனால் இந்த பிறந்தநாளை தன் தந்தையை நினைவுகூரும் விதமாக பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார்.

1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரை உலகில் அவருக்கு இது 60-வது வருடம். இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்பட உள்ளது.

அதோடு, பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது. அது தற்காலிகமாக இல்லாமல், தொடர்ந்து கிராமப்புற இளைஞர்களுக்குப் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் திறன் சார்ந்தும் உடல் சார்ந்தும் வழங்கப்பட இருக்கிறது.

சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

கமல், தன்னுடன் இத்தனை ஆண்டு காலம் பயணித்த அனைத்து முக்கிய நபர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனை விழாவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News