செய்திகள்
கேஎஸ் அழகிரி

அ.தி.மு.க. அரசு திவால் ஆகும் நிலையில் உள்ளது- கே.எஸ்.அழகிரி

Published On 2019-10-17 07:09 GMT   |   Update On 2019-10-17 07:09 GMT
அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

இதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படும். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க.வினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து விட்டு, அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. கடந்த 2015-ல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா நடத்தினார்.

2019 ஜனவரி 25-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3 லட்சம் கோடி முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி அறிவிக்கப்பட்ட முதலீடும் வரவில்லை, வேலை வாய்ப்பும் பெருகவில்லை.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு 84 லட்சம் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக காத்திருக்கின்றனர்.

இதன்மூலம் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவற்கு துணி வற்ற நிலையில் இருக்கிறது.

தி.மு.க. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறியிருக்கிறார்.

மத்தியில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி ஆட்சி பதவி விலகிய 2014-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதா? 2015-ல் மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை திணித்த போது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற்றவர் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நீட் தேர்வு அ.தி.மு.க. ஆட்சியில் திணிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட நிதி நிலைமையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், இனி எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News