செய்திகள்
தற்கொலை

திருச்சி அருகே வகுப்பறையில் ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை

Published On 2019-10-17 05:20 GMT   |   Update On 2019-10-17 05:20 GMT
திருச்சி அருகே வகுப்பறையில் ஆசிரியர் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா. பேட்டையை அடுத்த ஜம்புமடை அருகே உள்ள காட்டுக்கொட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்குமரன். இவர் நாமக்கல் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் தனப்பிரியா தேவி (வயது 17). அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தினமும் தனது வீட்டில் இருந்து பள்ளி பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பேருந்தில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும், தனப்பிரியா தேவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிளஸ்-2 மாணவி தனப்பிரியா தேவியை மற்ற மாணவிகள் மத்தியில் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்த ஆசிரியர்கள் பள்ளி அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரித்து சமரசம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவி தனப்பிரியா தேவியை தாவரவியல் ஆசிரியர் ரெங்கராஜ் (53) திட்டியுள்ளார். உனக்கு அறிவில்லையா... என்பது உள்ளிட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளதால் மாணவிகள் பலரது முன்னிலையில் அவர் அவமானம் அடைந்தார்.

மிகுந்த மன உளைச்சலில் இருந்த தனப்பிரியா தேவி, கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். சிறிது நேரம் கழித்து தனது தாயிடம் சென்று பள்ளியில் நடந்தது குறித்து கூறி அழுததோடு, தான் வி‌ஷமருந்தை குடித்ததையும் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்ட மாணவி தனப்பிரியா தேவி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தா.பேட்டை போலீசார் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் ரெங்கராஜ், பிளஸ்-2 மாணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இன்று தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News