செய்திகள்
மழை (கோப்புப்படம்)

சேலம் மாவட்டத்தில் விடிய விடிய மழை- ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-10-17 05:13 GMT   |   Update On 2019-10-17 10:31 GMT
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் 17-ந் தேதியான இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் அதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை முதலே சேலத்தில் மழை தூறலாக நீடித்தது. இரவு 9 மணி முதல் வேகமாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் ஆத்தூர், ஏற்காடு, எடப்பாடி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் போர்வைகளை போர்த்திய படி தூங்கினர்.

ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த தொடர் மழையால் அங்கு கடும் குளிர் வாட்டி வதைத்தது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர். மேகம் மற்றும் பனி மூட்டமாக காட்சி அளித்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே சென்றன.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

ஆத்தூர் 29.4, ஏற்காடு 27, எடப்பாடி 19, தம்மம்பட்டி 18, ஆனைமடுவு 14, சேலம் 12.9, வீரகனூர் 12, வாழப்பாடி 12, மேட்டூர் 10.8, பெத்தநாயக்கன் பாளையம் 8.2, கரியகோவில் 6, ஓமலூர் 4, சங்ககிரி 5.3, காடையாம்பட்டி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 194.6 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
Tags:    

Similar News