செய்திகள்
கோப்பு படம்

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை - கொசுக்கள் உற்பத்தியாகும் வீடுகளுக்கு அபராதம் விதிப்பு

Published On 2019-10-16 09:40 GMT   |   Update On 2019-10-16 09:40 GMT
வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர். ரத்த பரிசோதனை செய்வதால் பலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ‘ஏடிஸ்’ எனும் கொசு புழுக்கள் வீடுகளை சுற்றி தேங்கும் மழைநீரில் இருந்து உற்பத்தியாகி இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, ராயப்பேட்டை, குழந்தைகள் நல மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் 800 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிர கண்காணிப்புடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணியிலும் வீடு வீடாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஆனாலும் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடுகளிலும், காலி மனைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறதா? என்பதை ஆய்வு செய்கின்றனர்.

வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஸ்டான்லி ஆஸ்பத்திரி எதிரே உள்ள பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி இன்று அபராதம் விதித்தனர். குறைந்தபட்சம் ரூ. 100-ம், அதிகபட்சமாக ஆயிரக்கணக்கிலும், பள்ளி, கல்லூரிகளாக இருந்தால் லட்சங்கள் அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது.

டெங்கு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் மக்கள் உணர வேண்டும் என்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
Tags:    

Similar News