செய்திகள்
கேஎஸ் அழகிரி

அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- கே.எஸ். அழகிரி

Published On 2019-10-16 08:25 GMT   |   Update On 2019-10-16 08:25 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, தோல்வி பயத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மீது முதல்-அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மக்களுக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றியதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட நாங்குநேரி பொருளாதார மண்டலம், கங்கை கொண்டான் தொழில் நுட்ப பூங்கா திட்டங்கள் அரசியல் உள்நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சியில் பாதியிலே நிறுத்தப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் கலைஞர் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு விடும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

பொருளாதார வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் பெருக்குவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் 2011-ல் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் கிடப்பில் போடப்பட்டன. இதற்குப் பிறகு இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

இந்த திட்டங்கள் நிறைவேறினால் கலைஞர் ஆட்சிக்கு அந்தப் பகுதி மக்களிடையே நற்பெயர் ஏற்பட்டு விடும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

இத்தகைய திட்டங்கள் செயலிழக்கப்பட்டு, கடுமையான பாதிப்பை அந்தப் பகுதி மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயல்பட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News