செய்திகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரிடம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விசாரித்த காட்சி

தமிழ்நாடு முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு

Published On 2019-10-16 06:10 GMT   |   Update On 2019-10-16 06:12 GMT
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 124 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை:

தமிழ்நாட்டில் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

அரசு ஆஸ்பத்திரி மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 124 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

மதுரையில் 10 பேரும் சிவகங்கையில் 12 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 25 பேர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் உள்பட 30 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.

டெங்கு மட்டுமின்றி வைரஸ் காய்ச்சலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வகை காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த மாவட்டத்தில் இதுவரை திருத்தணியில் நிஷாந்த் (11 மாத குழந்தை), தெக்கலூர் லோகேஸ்வரி, அருங்குளம் சங்கீதா, கடம்பத்தூர் மோனிசா, மத்தூர் நந்தினி ஆகிய 5 பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளதால் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் சிகிச்சை பெறும் வார்டுக்கு அதிகாரி பீலா ராஜேஷ் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 36 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றியும் விவாதித்தார். காய்ச்சலுக்கு நிறைய பேர் வந்து செல்வதால் தேவையான மருந்து, மாத்திரைகள், ஊசி, இருப்பு உள்ளதா? என்று கேட்டறிந்தார்.


Tags:    

Similar News