செய்திகள்
கோப்புப்படம்

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-10-16 04:37 GMT   |   Update On 2019-10-16 04:37 GMT
மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் முல்லைபெரியாறு அணைக்கு தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவது வழக்கம்.

நேற்று இந்த அணை நீர்மட்டம் 123.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1402கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்திற்காக 1400கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று இந்த அணையின் நீர்மட்டம் 123.40அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்வரத்து 1976 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் 3301 மி.கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 71 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் 60.24 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1377கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்திற்காக 1390கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதேபோல் மஞ்சளாறு அணையின் உச்சநீர்மட்டம் 57 அடி ஆகும். தற்போது இந்த அணை நீர்மட்டம் 44 அடியாக உள்ளது. அணைக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 126.54 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை தொடர் மழையினால் நிரம்பியது. இந்த அணைக்கு வரும் 100 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 100.44 மி.கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சோத்துப்பாறை அணைப்பகுதியில் 6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. முல்லைபெரியாறு அணைப்பகுதியில் 2.8 மி.மீ மழையும், மஞ்சளாறு அணையில் 2 மி.மீ மழையும், தேக்கடியில் 1.4 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News