செய்திகள்
முருகன்

கொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்

Published On 2019-10-14 10:45 GMT   |   Update On 2019-10-14 10:45 GMT
திருச்சியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த முருகன் நகைகளுடன் பெங்களூர் சென்று குடியேற நினைத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோர் கடந்த 2-ந்தேதி கொள்ளையடித்து முடிந்ததும் நேராக காரில் மதுரைக்கு சென்றுள்ளனர்.

இதில் பிடிபட்ட கணேசனும், முருகனும் சேலம் ஜெயிலில் ஒன்றாக இருந்த போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு கணேசன்தான் சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுக்கொடுத்து உள்ளார். இதனால் அவர்கள் மிகவும் நெருக்கமாகவும், நண்பர்களாகவும் பழகியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் திருச்சி அருகேயுள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ஒன்றாக இணைந்து கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காததால் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த அவர்கள் அந்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டமிட்டு உள்ளனர்.

பெங்களூருவில் முருகனுக்கு சொந்தமாக பல கோடி மதிப்பிலான பங்களா உள்ளது. அதில் அவர்கள் குடும்பத்துடன் குடியேற இருந்தனர். முருகன் ஏற்கனவே கொள்ளையடித்த நகை, பணம் மூலம் தெலுங்கில் சுரேசை வைத்து படம் தயாரித்துள்ளான். அதில் லெட்சுமி என்பவர் நடித்துள்ளார்.

ஆனால் அந்த படத்தின் இயக்குநர் செலவு கணக்கில் முறைகேடு செய்ததால், முருகனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்துள்ளான்.

போலீஸ் பிடியில் சிக்க மாட்டோம் என நினைத்த முருகன், பெங்களூர் சென்று அங்கு குடியேற இருந்தான். ஆனால் திருச்சி போலீசார் முருகனின் உறவினர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவே, சுரேசை முதலில் கோர்ட்டில் சரணடைய செய்தனர். மேலும் போலீசாரின் பிடி இறுகியதால் வேறு வழியில்லாமல் பெங்களூரு கோர்ட்டில் முருகன் சரண் அடைந்துள்ளான்.

பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட முருகன், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். மேலும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது, அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் தனது பெயரை சிவா, ராஜா என மாற்றிக் கொடுத்து சிகிச்சை பெற்றுள்ளான்.

Tags:    

Similar News