செய்திகள்
நில அதிர்வு

தர்மபுரி மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு

Published On 2019-10-14 05:41 GMT   |   Update On 2019-10-14 05:41 GMT
தர்மபுரி மாவட்டத்தில் திடீர் நில அதிர்வால் விடிய விடிய கிராம மக்கள் தூங்காமல் தவித்தனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அம்பேத்கார் நகர், பெரியார் நகர், குறிஞ்சி நகர், திரு.வி.க. நகர், பச்சுனாம் பட்டி, மொரப்பூர் அருகே மருதிப்பட்டி, எலவடை, எம்.வெளாம்பட்டி, அரியகுளம், பாப்பிரெட்டிப் பட்டி, மோளையானூர், கம்பைநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 5 நொடிகள் இந்த அதிர்வு நீடித்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரூர் குறிஞ்சி நகரை சேர்ந்த கோபிநாத் என்பவர் கூறியதாவது:-

அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வானம் இடி இடிப்பது போல பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர். நானும் வீட்டில் இருந்து வெளியே வந்தேன்.

இந்த நில அதிர்வு அரூர் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டது.

நான் கடந்த 2003-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்தபோது நில அதிர்வு ஏற்பட்டது. பின்னர் அதை அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோன்ற நில அதிர்வு தற்போது அரூர் சுற்றுவட்டார பகுதியில் நிலவியதை நான் உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கம்பைநல்லூரை அடுத்த கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பூவேந்தஅரசு (வயது 50) கூறியதாவது:-

நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெடிச்சத்தம் கேட்டது. நானும், என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டோம். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த அதிர்வு 15 நொடி முதல் 20 நொடிகள் வரை நீடித்தது. வீட்டில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.வெளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கமலேசன் (40) கூறியதாவது:-

நான் கோழிப்பண்ணை நடத்தி வருகிறேன். நேற்று இரவு வெடிச்சத்தம் கேட்டது. கோழிகள் சத்தம் எழுப்பின. நான் பார்த்துவிட்டு தோட்டத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன். 5 வினாடிகள் இந்த சத்தம் கேட்டது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

நில அதிர்வு குறித்த தகவல் நேற்று நள்ளிரவில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவியதால் அந்த பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் நில அதிர்வு குறித்த தகவல்களை வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News