செய்திகள்
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சி.

பாசனத்திற்காக வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு

Published On 2019-10-09 05:55 GMT   |   Update On 2019-10-09 05:55 GMT
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசனத்திற்கும், திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனத்திற்கும் இன்று வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதன்படி பெரியார் பாசன பகுதி ஒரு போக பாசனத்திற்கு 85,563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19,005 ஏக்கர் பகுதிகளுக்கு இந்த தண்ணீர் பயனுள்ளதாக அமையும்.

இந்த தண்ணீர் 120 நாட்களுக்கு திறக்கப்படும். மொத்தம் 1130 கனஅடி தண்ணீர் அணையில் திறந்துவிடப்பட உள்ளது. நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கும் அளவு குறையும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர் நிலமும், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு 860 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீரோடு சேர்த்து ஆற்றில் 2090 கனஅடி தண்ணீர் வருகிறது.

முன்னதாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர்கள் ஆனந்தன், குபேந்திரன், மாயகிருஷ்ணன் மற்றும் பெரியார் பிரதான கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News