செய்திகள்
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்- ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

Published On 2019-10-09 05:11 GMT   |   Update On 2019-10-09 05:11 GMT
அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
நாங்குநேரி:

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் சீவலப்பேரி, மடத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார். அதனை நம்பி மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். அந்த தவறை இப்போது உணர்ந்துவிட்டனர்.

எனவே வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் நாராயணன் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.

வருகிற 17-ந்தேதி மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீவலப்பேரி பகுதியில் பிரசாரம் செய்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முத்துக்குமார், தமிழரசன், சாகுல்அமீது, சந்திரன், பொன்னுச்சாமி, பாஸ்கரன், பன்னீர் செல்வம், சரவணன், பாஸ்கரன், சாகுல்அமீது, வாசு, முத்து ராக்கு, முத்து கிருஷ்ணன், நல்லகண்ணு, இன்னாசி, துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News