செய்திகள்
ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது

பழனி கோவிலில் 70 நாட்களுக்கு பின் ரோப்கார் இன்று இயக்கம்

Published On 2019-10-08 03:49 GMT   |   Update On 2019-10-08 03:49 GMT
பழனி கோவிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் இன்று ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும் எவ்வித சிரமமின்றியும் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலும் பக்தர்கள் ரோப்காரில் செல்வதையே மிகவும் விரும்புவார்கள். பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவையில் மாதம் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இதேபோல வருடத்திற்கு 2 மாதங்கள் முற்றிலும் பராமரிப்பு பணிகள் நடத்தப்படும். அதன்படி கடந்த ஜூலை 29-ந் தேதி பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. கம்பி வடக்கயிறு, உருளைகள், பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய பொருட்கள் பொருத்தப்பட்டது.

மேலும் தேய்மானம் அடைந்த பாகங்கள் மாற்றப்பட்டது. ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. அதன்பிறகு ரோப்கார் பெட்டிகளில் வர்ணம் பூசும் பணி நடந்தது. அதன்பின் ரோப்கார் பெட்டிகளில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால் இன்று காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது. இதற்காக கோவில் அடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தலைமையில், துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் நாச்சிமுத்து உள்பட கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைகளை தொடர்ந்து ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக ரோப்கார் இயங்காத நிலையில் இன்று பக்தர்கள் மிகுந்த ஆர்வமுடன் அதில் பயணித்து சென்றனர்.
Tags:    

Similar News