செய்திகள்
கலெக்டர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.4 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

Published On 2019-10-05 08:15 GMT   |   Update On 2019-10-05 08:15 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெடரும்மான வீரராகவ ராவ் ஊரக மற்றும் நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்குரிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

2019 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 26.03.2019 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்றம் வாரியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் இடம் பெற்றனர்.

இவ்வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்குரிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

அதன்படி மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 4,25,568 ஆண் வாக்காளர்கள், 4,24,367 பெண் வாக்காளர்கள் மற்றும் 38 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) ஆக மொத்தம் 8,49,973 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, 7 பேரூராட்சிகளில் 37,361 ஆண் வாக்காளர்கள், 37,935 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) ஆக மொத்தம் 75,298 வாக்காளர்கள் உள்ளனர்.

4 நகராட்சிகளில் 97,562 ஆண் வாக்காளர்கள், 99,577 பெண் வாக்காளர்கள் மற்றும் 31 இதர வாக்காளர் (மூன்றாம் பாலினம்) ஆக மொத்தம் 1,97,170 வாக்காளர்கள் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்கள் கேசவதாசன் (ஊராட்சிகள்), ராஜா (பேரூராட்சிகள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) கணேசன் உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News