செய்திகள்
மாத்திரையில் கம்பி இருப்பதை படத்தில் காணலாம்.

சேலம் அருகே சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் கம்பி

Published On 2019-10-04 04:54 GMT   |   Update On 2019-10-04 04:54 GMT
சேலம் அருகே காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் கம்பி இருந்தது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோரூர் மேற்கு கிராமம் தேவேந்திர தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 29), கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மகாநிஷா (6).

இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள புள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் தனசேகரன் சிறுமியை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

பின்னர் வீட்டுக்கு சென்ற கோபாலகிருஷ்ணன் மாத்திரையை பாதியாக உடைத்து சிறுமிக்கு கொடுக்க முயன்றனர். அப்போது மாத்திரையில் கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் ஊர்மக்கள் 20 பேருடன் சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். சங்ககிரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் மாத்திரையை தயாரித்து வழங்கிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அப்போது கோபால கிருஷ்ணன் மற்றும் ஊர்மக்கள் கூறுகையில், மாத்திரையில் கம்பி இருந்ததை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். நாங்கள் கவனிக்காமல் குழந்தைக்கு கொடுத்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். மருந்து, மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் இவ்வளவு அஜாக்கிரதையாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனால் அந்த மருந்து நிறுவனத்தின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று விசாரணை நடத்துகிறார்கள். மேலும் அந்த மாத்திரைகளை தயாரித்து வழங்கிய மருந்து நிறுவனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிவில் அந்த மருந்து நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News