செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

Published On 2019-10-02 04:18 GMT   |   Update On 2019-10-02 04:18 GMT
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை:

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை துணை செயலாளர் பிரபாகரன், போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு, அளித்த பேட்டி வருமாறு:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இந்த ஆண்டும் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக கே.கே. நகர் பஸ் நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து 24-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4,265 பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 940 பஸ்கள் இயக்கப்படும்.

பிற ஊர்களிலிருந்து அந்த 3 நாட்களுக்கும் 8,310 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும், மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1,165 மற்றும் 920 பஸ்கள் இயக்கப்படும்.

அந்த நாட்களில் பெங்களூருவிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பஸ்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 27-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை 4,627 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் தீபாவளி முடிந்து பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் தீபாவளிக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பஸ்கள் முறையே 570 மற்றும் 925 பஸ்களும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 221 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

மேலும், ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறையில் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக 1,695 பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து மொத்தமாக 6,145 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பஸ்களும், கோயம்புத்தூரில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பஸ்களும், பெங்களூருவில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேலும், ஆயுதபூஜை முடிந்த பின்பு 8-ந்தேதி முதல் 9-ந்தேதிவரை, பிற ஊர்களிலிருந்து திருப்பூருக்கு 266 பஸ்களும், கோயம்புத்தூருக்கு 490 பஸ்களும், பெங்களூருவுக்கு 237 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

முன்பதிவு சிறப்பு மையங்கள் 23-ந்தேதியில் இருந்து 26-ந்தேதிவரை செயல்படும். கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்), பூந்தமல்லி பஸ் நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மொத்தமுள்ள 30 முன்பதிவு மையங்களில் 3-ந்தேதி (நாளை) முதல் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த, அலுவலர் உள்பட 208 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு ரோந்து வாகனங்களில் காவலர்கள் தொடர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். சென்னையில் மாலை 4 மணி முதல் இரவு 2 மணிவரை கனரக வாகனங்கள் உள்ளே வருவதை தடை செய்ய உள்ளோம். சுங்கச்சாவடிகளில் பஸ்கள் தேங்கி நிற்காத வகையில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் புகார் கொடுக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அம்மா குடிநீர் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டு ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மேலும் சென்னையில் 50 புதிய சிவப்பு நிற குளிர்சாதன பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 300 புதிய மின்சார பஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கனரக வாகன அமைச்சகம் 525 பஸ்கள் வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பஸ் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் மானியம் வழங்கும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டில் 825 மின்சார பஸ்களை தமிழக மாநகரங்களில் இயக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது.

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை பொறுத்தவரை அபராதங்கள் அதிகமாக இருப்பதால் அதை குறைப்பதற்காக போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு அபராதங்களை குறைத்து கூடிய விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News