செய்திகள்
திருநாவுக்கரசர்

இடைத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்: திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

Published On 2019-10-01 12:07 GMT   |   Update On 2019-10-01 12:07 GMT
அதிமுக மீது மக்கள் கோபத்தில் இருப்பதால் இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் எம்பி கூறியுள்ளார்.

மலைக்கோட்டை:

திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டு, சிவாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் டெங்கு பரவி வருவது தடுக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கும் நிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்கள் தடுக்கப் பட வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அவர் மந்திரியாக பேசுவதை காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும். அவர் பேசுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும். தேர்தலுக்காக இடதுசாரி கட்சிகள் யாரிடமிருந்தும் பணம் வாங்கி இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் அவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என நாம் மட்டுமல்ல உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எதிர் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலை வகித்தார். மாநில மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி, முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணா சிலை விக்டர், செய்தி தொடர்பாளர் சிவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News