செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் 4 நாள் பிரசாரம்

Published On 2019-10-01 05:19 GMT   |   Update On 2019-10-01 05:19 GMT
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் நிற்கிறார்கள். நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.

இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும், நாங்குநேரி தொகுதியில் 37 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. 2 கட்சிகள் சார்பிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக தலைவர்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் 4 நாட்களும், நாங்குநேரி தொகுதியில் 4 நாட்களும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள் இந்த தொகுதியில் பிரசாரம் செய்கிறார். வருகிற 14,15 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 17,18 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News