செய்திகள்
வைகோ

கனரா வங்கிப் பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- வைகோ கண்டனம்

Published On 2019-09-30 09:04 GMT   |   Update On 2019-09-30 09:04 GMT
கனரா வங்கிப் பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரெயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலை வாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரெயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; தமிழ்நாட்டு இளைஞர்கள் 53 பேர் மட்டுமே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இப்போது, ரெயில்வே துறையைப் போன்று, மத்திய அரசு வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருக்கின்றது.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், எழுத்தர் எனப்படும் பணி இடங்களில் 464 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.

வங்கித்துறையில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி இடங்களுக்கு இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், வங்கி உதவியாளர், எழுத்தர் போன்ற பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை.

இந்தியா முழுவதும் வங்கிப் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளைப் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்வது என்ற நடைமுறையில், தமிழ்நாட்டில் படித்தவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று வந்தனர். இதனை மாற்றி, வெளிமாநிலத்தவரைத் தேர்வு செய்வது, வங்கிக்கு வருகின்ற பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்; வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.

தமிழ் மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, கனரா வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை, கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த, அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News