செய்திகள்
குற்றாலம் மெயினருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை

Published On 2019-09-30 05:52 GMT   |   Update On 2019-09-30 05:52 GMT
நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கடலோர பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது. நேற்று பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தென்காசி, சங்கரன் கோவில், ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி, நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும், சில நேரங்களில் சாரல் மழையுமாக பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது.

களக்காடு, மாவடி, எஸ்.என். பள்ளிவாசல், கருவேலங்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை மழை கொட்டியது. மிதமான அளவில் சாரல் போல மழை பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும் மழை பெய்தது. ஏற்கனவே இப்பகுதியில் மழையின்றி வறட்சி நிலவி வரும் நிலையில் இன்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 578.76 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகல் இந்த தண்ணீரின் அளவு இருமடங்காக அதிகரித்தது. தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 111.55 அடியாகவும் உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 142 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.10 அடியாக உள்ளது. குண்டாறு அணை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கடனாநதியின் நீர்மட்டம் 72.60, ராமநதி 76, கருப்பாநதி 68.48, கொடுமுடியாறு 39, அடவிநயினார் 123 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, ஆய்க்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் பலஇடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பாளையில் மனக்காவலம் பிள்ளை நகர், அண்ணாநகர், மேல குலவணிகர்புரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளது.

நெல்லை சந்திப்பு, பால பாக்யா நகர் மற்றும் டவுன் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

குற்றாலம் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இதனால் மெயினருவியில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மெயினருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தென்காசி-90, சிவகிரி-77.2, ஆய்க்குடி-70.4, சங்கரன்கோவில்-65, ராமநதி-60, கருப்பாநதி-54, செங்கோட்டை-49, குண்டாறு-40, மூலக்கரைப்பட்டி-38, அடவிநயினார்-32, சேர்வலாறு-31, சேரன் மகாதேவி-30, அம்பை-23, கடனாநதி-21, நெல்லை-20, கொடுமுடியாறு-20, பாளை-17.2, பாபநாசம்-17, கன்னடியன்-16.2, மணிமுத்தாறு-14, ராதாபுரம்-12, நாங்குநேரி-11, களக்காடு-6.4, நம்பியாறு-5.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டி, கடம்பூர், எட்டையபுரம், சாத்தான்குளம், மணியாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விடியவிடிய மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவில்பட்டி பகுதியில் நேற்று காலையில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலையில் திடீரென லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக பெய்தது. பின்னர் இரவு 1 மணி முதல் காலை வரை லேசான சாரல் மழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போன்று கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணியளவில் தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் மழை விட்டு விட்டு பெய்தது. பலத்த மழையினால் மணல் மேடு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

எட்டயாபுரம்-72, சாத்தான்குளம்-69, கடம்பூர்-63, மணியாச்சி-56, கோவில்பட்டி-48, கழுகுமலை-30, கயத்தாறு-29, ஸ்ரீவைகுண்டம்-23, காடல்குடி-17, ஒட்டப்பிடாரம்-15, விளாத்திகுளம்-13, வைப்பார்-11, வேடநத்தம்-10, திருச்செந்தூர்-5, கீழஅரசடி-3, காயல்பட்டினம்-2, தூத்துக்குடி-1.5.

Tags:    

Similar News