செய்திகள்
இர்பான்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் இர்பான் கைது

Published On 2019-09-30 04:03 GMT   |   Update On 2019-09-30 04:03 GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மாணவர் இர்பான் சேலம் தீவட்டிப்பட்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தமிழ்நாட்டில் கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி தகுதி உள்ள மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.



ஆனால் நீட் தேர்விலும் ஆள்மாறாட்ட தில்லுமுல்லு செய்து மருத்துவக் கல்லூரியில் சில மாணவர்கள் சேர்ந்து இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருப்பது முதலில் அம்பலமானது.

அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது ராகுல், பிரவின், அபிராமி, இர்பான் ஆகிய 4 மாணவர்களும் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதோடு இடைத்தரகர்களாக திருவனந்தபுரம், மும்பை மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு இருப்பதும் தெரிந்தது. லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.ராகுல், பிரவின், அபிராமி உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 5 பேரும் தேனி அழைத்துச் செல்லப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்ததை தொடர்ந்து பிரவின் மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆள்மாறாட்டம் புகாருக்கு உள்ளாகி இருக்கும் மாணவர் இர்பான் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இர்பான் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள படித்து வருகிறார்.

சமீபத்தில் ஆள்மாறாட்டப் புகார்கள் வெளியானதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்.பி. பி.எஸ். படிப்பில் 100 பேர் சேர்க்கப்பட்டனர்.

அந்த 100 பேரின் சேர்க்கை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இர்பான் மட்டும் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை. கடந்த 9-ந்தேதி அவர் குடல்இறக்கம் நோய் சிகிச்சைக்காக விடுப்பில் சென்றார். விடுதியில் தங்கியிருந்த அவர் தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் அவரை தொடர்பு கொண்டு முதலாம் ஆண்டு மருத்துவ சேர்க்கை ஆவணங்களை பெற முயற்சி நடந்தது. ஆனால் இர்பான் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து மாணவர் இர்பானின் வாணியம்பாடி வீட்டு முகவரிக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரிஜிஸ்டர் தபால் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 30-ந்தேதி (திங்கட்கிழமை) முதலாம் ஆண்டு சேர்க்கை ஆவணங்கள், நீட் தேர்வு ஆவணங்கள், ஹால்டிக்கெட் மற்றும் மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று இர்பானுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இர்பான் தலைமறைவால் அவர் ஆள்மாறாட்டம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. அவர் மொரீஷியஸ் நாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த  மாணவர் இர்பான் சேலம் தீவட்டிப்பட்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை முகமது சபியை நேற்று வாணியம்பாடியில் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News