செய்திகள்
எச் ராஜா

தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை- எச்.ராஜா

Published On 2019-09-28 06:11 GMT   |   Update On 2019-09-28 06:11 GMT
தலைவர் இல்லாததால் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை என்று பெரம்பலூரில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு செய்ததும் நாட்டில் எங்குமே போராட்டம் நடைபெறவில்லை. அனைத்துக்கட்சியினரும் ஆதரவு அளித்ததோடு அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. அவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் பிரிவினைவாதிகள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பு மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு இனி இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி அரசியல்வாதிகள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை எதிர்ப்பதன் மூலம் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். தமிழகத்திலுள்ள தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சமூகநீதி என்பது கொள்கையல்ல. ஓட்டு வாங்கும் தந்திரம்.

பகவத் கீதை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி ஊடகங்கள் அனுமதிக்கின்றன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பகவத் கீதை குறித்து விவாதங்கள் நடத்தும் ஊடகங்கள் குரான், பைபிள் குறித்து விவாதங்கள் நடத்த முன்வருமா?. நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றன என வெளிப்படையாக நான் குற்றம் சுமத்துகிறேன். ஊடகங்கள் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழக பா.ஜ.க.வுக்கு மாநில தலைவரை விரைவில் உரிய நேரத்தில் மத்திய தலைமை அறிவிக்கும். பா.ஜ.க.வை குறித்த மட்டும் கட்சி நடவடிக்கைகளை கவனிப்பது கோர் கமிட்டி தான். தலைவர் இல்லை என்பதால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கி விடவில்லை. எப்போதும் போல் உற்சாகமாக கட்சி செயல்பாடுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News