செய்திகள்
திரைப்பட இயக்குனர் கவுதமன் வேட்பு மனு தாக்கல் செய்த போது எடுத்த படம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- கவுதமன் உள்பட 8 பேர் இதுவரை மனுதாக்கல்

Published On 2019-09-28 04:35 GMT   |   Update On 2019-09-28 04:35 GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சினிமா இயக்குனர் கவுதமன் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. 30-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கடந்த 4 நாட்களில் மட்டும் சுயேட்சையாக 3 பேரும், இந்திய குடியரசு கட்சி சார்பில் ஒருவரும் என 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

5-ம் நாளான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பாலக்குறிச்சியை சேர்ந்த கந்தசாமி தனது கட்சியினருடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து சினிமா இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கவுதமன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மனுதாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புளியூரை சேர்ந்த விவசாயி தங்கராஜ் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார்.

இவரை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நடுப்பட்டியை சேர்ந்த முருகன் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார். இவர் அகில பாரத இந்து மகாசபை சார்பில் போட்டியிடுகிறார்.

நேற்று மட்டும் 4 பேர் ஒரே நாளில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுவரை சினிமா இயக்குனர் கவுதமன் உள்பட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும், நாளையும் விடுமுறை நாளாகும். கடைசி நாளான 30-ந் தேதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மனுதாக்கல் செய்த பின்னர் இயக்குனர் கவுதமன் கூறுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க- தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும். இதற்காகவே தமிழ் பேரரசு கட்சியை தொடங்கி முதல் முதலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.
Tags:    

Similar News