செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நிலம் ஆக்கிரமிப்பு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Published On 2019-09-26 07:56 GMT   |   Update On 2019-09-26 07:56 GMT
600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் பகுதியை சேர்ந்த ராஜா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சத்திய நாராயண ரெட்டி என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் 16 ஏக்கருக்கு மட்டுமே பட்டா பெற்றுள்ள நிலையில், அந்த நிலத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அபகரித்த அரசு நிலத்தை காசா கிராண்டே எனும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

சத்தியநாராயண ரெட்டியிடம் இருந்து இடத்தை பெற்ற தனியார் கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே தாங்கள் வாங்கிய நிலத்திற்கு உரிமை கோரியும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி சி.சரவணன் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் கூறியதாவது:-

முதற்கட்ட விசாரணையில் சத்தியநாராயண ரெட்டி பல்வேறு காலகட்டத்தில் போலியான ஆவணங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் அரசுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அதோடு, குழு சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள், துணை போன அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்ந்த ராஜாவின் மனுவை முடித்து வைத்தும், நிலத்திற்கு உரிமை கோரி காசா கிராண்டே நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். சிறப்பு குழு விசாரணைக்கு தடைவிதிக்கவும் மறுத்து விட்டனர்.
Tags:    

Similar News