செய்திகள்
மாணவன் உதித் சூர்யா

மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2019-09-25 03:44 GMT   |   Update On 2019-09-25 03:47 GMT
ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
மதுரை:

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மாணவர் உதித்சூர்யா, தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன்பின் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். சில நாட்கள் வகுப்புக்கு சென்றேன். எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தொடர்ந்து வகுப்புக்கு செல்லவில்லை. கடந்த 12-ந்தேதி முதல் கல்லூரியில் இருந்து விலகிக்கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துவிட்டேன். நான் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக, சமீபத்தில் செய்திகள் வெளியானதை அறிந்தேன். இது முற்றிலும் தவறானது. என் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு, காழ்ப்புணர்ச்சி காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. என் மீதான புகாரின்பேரில் தேனி கண்டமனூர் விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.



இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று பகல் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த வழக்கிற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

அப்போது நீதிபதி, “மருத்துவம் தொடர்பானது என்பதால் இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமாதான் ஞாபகத்துக்கு வருகிறது” என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தனக்கு பதிலாக தேர்வு எழுத மற்றொரு நபரை அனுப்பி மனுதாரர் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இந்த ஆள்மாறாட்ட மோசடிக்கு முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ளார். தமிழகத்தில் அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும்” என்றார்.

அதற்கு நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது இந்த வழக்கு விசாரணையை தொடங்குவார்கள், என்று கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மனுதாரர் வக்கீல்: மனுதாரர் இளம் வயதுடையவர். அவர் கைது செய்யப்பட்டால், அவரது எதிர்காலம் பாதிக்கப்படும்.

அரசு வக்கீல்: மனுதாரருக்காக நீட் தேர்வை மற்றொரு நபர் மும்பைக்கு சென்று எழுதி உள்ளார். அவரே கலந்தாய்விலும் பங்கேற்றுள்ளார். பின்னர் தேனி மருத்துவ கல்லூரி முதல்வரையும் அந்த மர்ம நபர்தான் சந்தித்து, வகுப்பறை வரை சென்றுள்ளார். வகுப்புகள் தொடங்கிய பின்பு நேரடியாக மனுதாரர் உதித்சூர்யா பங்கேற்றுள்ளார். இந்த ஆள்மாறாட்ட குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. எனவேதான் தேனி கண்டமனூர் போலீசார் பதிவு செய்த வழக்கானது, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

நீதிபதி: சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது இந்த வழக்கு விசாரணையை தொடங்குவார்கள்?

அரசு வக்கீல்: நேற்றுதான் (அதாவது நேற்று முன்தினம்) இதுதொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் போலீசார் தங்களின் விசாரணையை தொடங்கிவிடுவார்கள்.

நீதிபதி: இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மனுதாரர் இந்த வார கடைசியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு சரண் அடையலாம். அவ்வாறு சரண் அடைந்தால், இந்த முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி அடுத்த வாரம் விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர் நீதிபதி, இந்த வழக்கை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News