செய்திகள்
கைது

வியாசர்பாடி பேராசிரியர் கொலையில் அரசு ஊழியர் கைது

Published On 2019-09-24 08:48 GMT   |   Update On 2019-09-24 08:48 GMT
வியாசர்பாடியில் ஏமாற்றிய பணத்தை திருப்பி கேட்டதால் பேராசிரியரை கொலை செய்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:

காசிமேடு சூரியநாராயணன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (35) தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சரண்யா.

இவர்கள் இருவரும் அரசு வேலைக்காக வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த வேலாயுதம் (42) என்பவரிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.

கிண்டியில் உள்ள உணவு பாதுகாப்பு கழகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்த வேலாயுதம், தனக்கு முக்கிய பிரமுகர்கள் பலரை தெரியும் எனக்கூறி உள்ளார். அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியதை நம்பி கார்த்திக் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் வேலாயுதம் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் வேலை பார்த்த கல்லூரி வேலையும் பறிபோனது.

இதனால் அரசு வேலையை சீக்கிரம் வாங்கி தாருங்கள் அல்லது பணத்தை திருப்பி தாருங்கள் என கார்த்திக்கும், சரண்யாவும் அடிக்கடி வேலாயுதத்திடம் கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி வேலாயுதம் நேற்று மாலை பணத்தை திருப்பித் தருவதாக கூறி கார்த்திக், சரண்யா ஆகியோரை வீட்டுக்கு அழைத்தார். அதை நம்பி இருவரும் அங்கு சென்றனர்.

அப்போது வேலாயுதம் கோவில் பிரசாதம் எனக்கூறி வி‌ஷம் கலந்த பொடி மற்றும் பஞ்சாமிர்தத்தை கொடுத்தார். சாமி பிரசாதம் என நம்பி இருவரும் சாப்பிட்டனர்.

கார்த்திக்குக்கு சில நிமிடத்தில் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சரண்யா கையில் மீதம் இருந்த பிரசாதத்தை தட்டிவிட்டு விட்டு புறப்பட்டார். சில நிமிடங்களில் அவரும், சரண்யாவும் மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கார்த்திக் இறந்துவிட்டார். சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான வேலாயுதத்தை இன்று கைது செய்தனர்.

ஏமாற்றிய பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் கார்த்திக்குக்கு வி‌ஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அவர் இதுபோல வேறு யாரையும் ஏமாற்றினாரா? என்று விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

Similar News