செய்திகள்
மதுரை ஐகோர்ட்

மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-09-24 07:36 GMT   |   Update On 2019-09-24 07:36 GMT
வெளிமாநில மாணவர் பங்கேற்றதால் மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட பலர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி வெளியிடப்பட்டது. 8-ந்தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி தனியார் சுய நிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

இந்த ஆண்டு மாநில இடஒதுக்கீட்டின் கீழ் வெளிமாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வெளிமாநிலத்தில் வசிக்கும் பல்வேறு நபர்கள், தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெளி மாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று பள்ளிப்படிப்பை முடித்த பலரும், தமிழக ஒதுக்கீட்டின்கீழ் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பலர் வெளி மாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். பலர் இரட்டை இருப்பிட சான்றுகளை வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

பின்னர் 126 பேர்களில் பலர் தங்களது இருப்பிடம் குறித்து உரிய விவரங்களை தாக்கல் செய்ததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.

இதனால் ஏற்கனவே நடந்த மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்துவதற்கு சாத்தியமில்லை. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசே உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News