செய்திகள்
குடிமராமத்து பணியை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டபோது எடுத்த படம்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- அமைச்சர் தங்கமணி பேட்டி

Published On 2019-09-23 16:05 GMT   |   Update On 2019-09-23 16:05 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் திடுமல், குறும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சேளூர், வடகரையாத்தூர், வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்துணவு மையம், மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்பட ரூ.87 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேற்று திறந்து வைத்தார். பின்னர் ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்காலில் நடைபெற்று முடிந்த குடிமராமத்து பணியினை அமைச்சர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

ராஜவாய்க்கலில் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்ற நோக்கதில் கரையை பலப்படுத்தும் வகையில் குடிமராமத்து பணியின் கீழ் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் 538 மீட்டர் அளவில் வாய்க்காலின் மேற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறைக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறும். தினகரன், கமல் ஆகியோர் தேர்தல் பயத்தின் காரணமாக போட்டியிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், வக்கீல் தனசேகர், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News