செய்திகள்
திண்டுக்கல் லியோனி

மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் - திண்டுக்கல் ஐ.லியோனி

Published On 2019-09-21 12:46 GMT   |   Update On 2019-09-21 12:46 GMT
மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
சென்னை:

சேப்பாக்கம் பகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் விருது பெற்ற ஏ.கே.ஜெகதீசனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணியில் நடந்தது. பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன் தலைமை வகித்தார். கே.கோபி வரவேற்றார். தமிம் அன்சாரி, பா.சிதம்பரம், எம்.ராஜகாந்தம், அயூப்கான் முன்னிலை வகித்தனர்.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் ஐ.லியோனி, தயாநிதிமாறன் எம்.பி., ஈரோடு இறைவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. சார்பில் 39 எம்.பி.க்களை வெற்றி பெறச் செய்து மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் மு.க.ஸ்டாலின்.

ஒரு நாட்டில் இருக்கக்கூடிய மக்களை இந்தி மொழி படி என்று கட்டாயப்படுத்துவது தவறு ஆகும். எங்கள் தாய்மொழியை 2-ம் தரமாக தள்ளுவதை எந்த தமிழனும் ஒத்துக்கொள்ளமாட்டான்.

அமித்ஷாவின் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கக் கூடிய காரியம் அல்ல. சாலையில் அ.தி.மு.க. பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ விவகாரத்தில் தைரியமாக நடிகர் விஜய் ஆட்சியாளர்கள் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்.

தமிழகத்தில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பேசியதாவது:-

எமர்ஜென்சியையே எதிர்த்தவர்கள் தி.மு.க.வினர் நெருக்கடிக்கு அஞ்சாதவர்கள். இந்தி மொழி திணிப்பு பிரச்சினை, ஜல்லிக்கட்டு போராட்டம் போல உருவாகும் என்பதால் மத்திய மந்திரி அமித்ஷா தனது கருத்தை மாற்றி விட்டார்.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. பா.ஜனதாவின் ‘வாய்ஸ்’ ஆக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார்.

இரட்டை அர்த்த கருத்துக்களை கூறி மக்களை ரஜினி குழப்புகிறார். பாரதிய ஜனதாவுக்காக தான் ரஜினி கட்சியை தொடங்குவார். தமிழர்களை பாதுகாக்கும் இயக்கம் தி.மு.க. ஆகும். மக்கள் அனைவரும் தி.மு.க.வுக்கு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News