செய்திகள்
நித்யானந்தா

மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கம் நித்யானந்தாவிடம் உள்ளதா? - போலீசார் விசாரணை

Published On 2019-09-21 04:07 GMT   |   Update On 2019-09-21 04:07 GMT
மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும் என்று சாமியார் நித்யானந்தா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவேரிபுரம் கிராமம் பாலவாடி பகுதியை சேர்ந்த சக்திவேல், வேலுசாமி மற்றும் சிலர் கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சாமியார் நித்யானந்தா மீது ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த கோவிலானது மேட்டூர் அணை கட்டும்போது இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் புனரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் நித்யானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் முற்பிறவியில் தன்னால் கட்டப்பட்டது என்றும், அங்கு இருந்த மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும், என கூறியுள்ளனர்.

அதன்பேரில் மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த மூலவர் லிங்கம் சாமியார் நித்யானந்தாவிடம் உள்ளதா? என்றும், அவர் கூறியது உண்மையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேட்டூர் அணை ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கம் தன்னிடம் உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தி சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மூலவர் லிங்கத்தின் சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News