செய்திகள்
அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன்

காங்கிரஸ் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்- நமச்சிவாயத்துக்கு அதிமுக பதிலடி

Published On 2019-09-20 14:40 GMT   |   Update On 2019-09-20 14:40 GMT
சோனியா பற்றி விமர்சித்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.
புதுச்சேரி:

சோனியா பற்றி விமர்சித்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு தலைவர் என்றால் வெற்றி, தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் தலைவருக்கு கீழ் உள்ளவர்களும் தலைவர் சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டும். ஆனால் பெயரளவில் ராகுலை தலைவர் பதவியில் அமர்த்திவிட்டு, அனைத்து முடிவுகளையும் அடுத்தகட்ட நிர்வாகிகளே எடுத்து செயல்படுத்தினர். தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது, ஒரு கருத்தையும் கூறினார்.

அதாவது காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சுயநலம் மிக்கவர்கள், கட்சி நலனை விட தங்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டவர்கள், என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் நிர்ப்பந்தம் செய்து தங்கள் மகன்களுக்கு சீட்டு பெறுவதிலேயே குறியாக இருந்தனர் என்றும் வெறுப்படைந்து இக்கருத்தினை தெரிவித்தே பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தான் நல்ல தலைமைக்கு பெயர் பெற்ற அம்மாவின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகரியின்  குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் போது எடுத்துக் கூறினார். 

உண்மை நிலை இவ்வாறிருக்க புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தன்னுடைய உயரம் என்ன என்பதே தெரியாமல் தமிழக அமைச்சர்களை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுவையிலிருந்து மிரட்டுகிறார். இவருடைய மிரட்டலுக்கு சாதாரண ஒரு கீழ்மட்ட அ.தி.மு.க. தொண்டன் கூட பயப்பட மாட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News