செய்திகள்
தற்கொலைக்கு முயன்ற ரேணுகாதேவி

மாயமான மகளை மீட்காததால் வேதனையில் தாய் தற்கொலை முயற்சி

Published On 2019-09-20 10:45 GMT   |   Update On 2019-09-20 10:45 GMT
ஆற்றில் தந்தை வீசிய மகளை மீட்க முடியாததால் வேதனையில் இருந்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 35). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஷோபனா (13), லாவண்யா (11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாண்டிக்கும், அவருடைய மனைவி ரேணுகாதேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி பாண்டி மதுபோதையில் பள்ளியில் இருந்து வந்த தனது மகள்கள் லாவண்யா, ஸ்ரீமதியை அழைத்து வந்தார். அப்போது மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் அந்த பகுதியில் உள்ள அரசலாற்றில் 2 மகள்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வீசி உள்ளார்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து லாவண்யாவை மட்டும் மீட்டு கரை சேர்த்தனர். ஆனால் ஸ்ரீமதியை மட்டும் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து சிறுமியை தேடி பார்த்தனர். நேற்று வரை 3 நாட்களாக தொடர்ந்து ஆற்றில் தேடி பார்த்தனர். நேற்று மாலை வரை ஸ்ரீமதி உடலை மீட்க முடியவில்லை.

இதனால் மகள் ஸ்ரீமதி உடலை மீட்க முடியாததால் தாய் ரேணுகாதேவி மிகவும் வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை துக்கம் தாங்காமல் ரேணுகா தேவி திடீரென தனது உடலில் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்து உடனே விரைந்து சென்று ரேணுகாதேவியை மீட்டனர். பின்னர் அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஆற்றில் மாயமான ஸ்ரீமதியை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று 4-வது நாளாக ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News