செய்திகள்
பூண்டி ஏரி

திருவள்ளூரில் பலத்த மழை - பூண்டி ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது

Published On 2019-09-20 06:47 GMT   |   Update On 2019-09-20 06:47 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து நேற்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இந்த நான்கு ஏரிகளும் வறண்டன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை சமாளிக்க காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று நீர் மற்றும் கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து சப்ளை செய்து வருகிறார்கள்.

மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினை தீரும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

நேற்று முன்தினம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ. 7 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது.

தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி வழிவதால் ஒதப்பையில் உள்ள பாலத்தின் கீழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை மக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

இந்த பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஒதப்பை தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருவள்ளூரில் அதிகபட்சமாக 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் பூண்டி ஏரியில் 12.50 அடி தண்ணீர் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 19.50 அடியானது.

தொடர்ந்து ஏரிக்கு 2242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இருப்பது விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

இதேபோல பலத்த மழை காரணமாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் இதுவரை வறண்டு கிடந்த ஏரிகளில் குட்டையாக தண்ணீர் தேங்கத் தொடங்கி இருக்கிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. ஏரிக்கு தற்போது 315 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 27 மி.கனஅடியாக உள்ளது.

சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரிக்கு 347 கனஅடி தண்ணீர் வருகிறது. 30 மி.கனஅடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. ஏரிக்கு 93 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 8 மி.கனஅடியாக உயர்ந்து இருக்கிறது.

இதுவரை ஏரிகளில் பூஜ்ஜியமாக இருந்த தண்ணீர் இருப்பு தற்போது அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News